Home » » பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பிரியமானவராக சகுனி மாறியது எப்படி

பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பிரியமானவராக சகுனி மாறியது எப்படி

Written By Somperi on திங்கள், 29 ஜூலை, 2019 | ஜூலை 29, 2019

பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பிரியமானவராக சகுனி மாறியது எப்படி?

Baby_thief_Krishna_somperi

மஹாபாரத கதையின் நாயகனே கிருஷ்ணர்தான். அந்த சூத்திரதாரியின் கண்ணசைவில்தான் அந்த மாபெரும் குருக்ஷேத்திர யுத்தமே நடைபெற்றது. கிருஷ்ணர் எத்தனையோ மாயங்களும், சூதும் செய்துதான் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்தார் என்று சொல்வதுண்டு. இவை எல்லாமே ஒரு மாயைதான்... பூமியின் பாரம் தாளாத பூதேவியின் வேண்டுதலுக்கு ஏற்பவே திருமால், கிருஷ்ணராக அவதரித்தார். மாபெரும் போரை நடத்தி, அநேக கொடியவர்களை அழித்து பூவுலகை சமன்படுத்தினார் என்பதே மஹாபாரதம் தெரிவிக்கும் முடிவான கருத்து.
எத்தனையோபேர் கௌரவ, பாண்டவர்களுக்கு இடையே போரே நடக்கக் கூடாது என்று விரும்பியபோதும் கிருஷ்ணர் இந்தப் போரை விரும்பினார். அதைப்போலவே எதிர்தரப்பான கௌரவர்கள் தரப்பிலும், இந்தப் போரை தவிர்க்க முடியாததாக மாற்றிக்காட்டியவர் சகுனி. துஷ்ட சதுஷ்டரில் ஒருவன் என சகுனி இகழப்பட்டாலும், மஹாபாரதத்தில் மிக மோசமான மனிதர் என வர்ணிக்கப் பட்டாலும், சகுனி கிருஷ்ணரின் வேலையை எளிதாக்கவே உதவினார். தனது சகோதரி காந்தாரியின் மகனான துரியோதனனுக்கே அரசாளும் உரிமை முழுமையாகக் கிடைக்க வேண்டும். அதற்காகவே சகுனி பாண்டவர்களுக்கு எதிராக மாறி, பின்னர் மோசமான எதிரியாகவும் மாறினான் என்று மேம்போக்காக சொல்லப்பட்டாலும், சகுனியின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக மிகவும் சோகமயமான கண்ணீர் கதை இருக்கவே செய்கிறது. அந்த சோகத்தின் பலமான தாக்குதலே சகுனியை ஒரு ராஜதந்திரியாக, விடாப்பிடி போராளியாக ஏன் கண்ணனுக்கு நிகரான தீர்க்கதரிசியாகக் கூட மாற்றியது. அது என்ன அந்த கண்ணீர் நிறைந்த கதை? சகுனி சிறுவனாக இருந்தபோதே பிறந்த கதை அது...
பீஷ்மரால் விதையிடப்பட்டு திருதராஷ்டிரனால் வளர்க்கப்பட்ட சோகக் கதை...
காந்தார நாட்டு மன்னன் சுபலனின் கடைசி மகன் சகுனி. பிறவியிலேயே துறுதுறுப்பும் நல்ல புத்திசாலித்தனமும் கொண்ட சகுனிக்கு அக்கா காந்தாரி மீது அளவற்ற அன்பு. தாயை இழந்த சகுனிக்கு தாயாக இருந்தவளே காந்தாரிதான். கண்ணிழந்த திருதராஷ்டிரனுக்கு மணமுடிக்க பெண்ணை தேடி அலைந்தார் பிதாமகர் பீஷ்மர். இறுதியாக காந்தார நாட்டின் இளவரசியான காந்தாரியை பெண் கேட்டு அவர்கள் அவைக்குச் சென்றார். கண்ணிழந்த ஓர் அரசனுக்கு பெண் தர காந்தாரியின் தந்தை சுபலன் விரும்பவில்லை என்றாலும், பெண் தரவில்லை என்றால் பீஷ்மர், காந்தாரத்தையே அழித்து விடுவார் என்ற பயமும் இருந்தது. எனவே ராஜரீதியாக நாட்டின் நலனை உத்தேசித்து காந்தாரியை மணமுடித்துக் கொடுத்தார்.
கண்ணிழந்த அரசனுக்கு தனது அக்காவை கட்டிக் கொடுத்தது தம்பி சகுனிக்கு பிடிக்கவே இல்லை. எனினும் பீஷ்மர் என்னும் மகாவீரரின் பராக்கிரமத்துக்கு முன்பு காந்தாரம் ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையை எண்ணி வருந்தினார். அப்போது முதலே பீஷ்மரை தனது எதிரியாக கருதத் தொடங்கிவிட்டார்..
இந்த நிலையில் மணமுடித்துச் சென்ற காந்தாரிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்ற தகவல், ஒற்றர்கள் மூலம் பீஷ்மருக்கு எட்டியது. தேள் கொட்டியதை போல் துடித்த பீஷ்மர், குரு வம்சத்துக்கு இப்படி ஒரு இழுக்கா என்று வெகுண்டார். காந்தாரியை சொற்களால் வறுத்தெடுத்தார். ஜாதக பலன்படி காந்தாரியின் முதல் கணவருக்கு ஆயுள் பலமில்லை என்று ஜோதிடர்கள் சொன்னபடியால், ஒரு ஆட்டுக்கிடாவுக்கு மாலை சூட்டி மணாளனாக ஏற்றுக்கொண்டாள் காந்தாரி.பின்னர் அந்த ஆட்டுக்கிடாயை வெட்டி பலி கொடுத்து, முதல் கணவன் இறந்து போனதாக சடங்குகள் செய்தார்கள். இதை காந்தாரி கூறியதும், இன்னும் வேகமாக சீறினார் பீஷ்மர்.
அந்த ஆட்டுக்கிடா மட்டும் பலி கொடுக்கப்படாமல் இருந்தால் இந்நேரம் அதுவே உன் முதல் கணவன் என கூறி எதிரிகள் ஏகடியம் பேசுவார்கள் என்று திட்டித் தீர்த்தார். இந்த விஷயத்தை மறைத்து திருமணம் செய்த, சுபலன் மற்றும் அவனது நாட்டை நிர்மூலமாக்க பீஷ்மர் எண்ணினார். காந்தார நாட்டுக்கு படையெடுத்துச் சென்று எல்லோரையும் சிறைப் பிடித்தார். அப்போதும் பீஷ்மரை சமாதானப்படுத்திய சுபலன் மற்றும் அவரது உறவுகள் பின்னர் நைச்சியமாக பீஷமருக்கு விஷம் வைத்துக் கொல்ல திட்டம் போட்டனர். இதையும் ஒற்றர் மூலம் தெரிந்து கொண்ட பீஷ்மர், கோபத்தின் உச்சிக்கே சென்றார். ஒட்டுமொத்த சுபலன் கூட்டத்தை பாதாள அறைக்குள் சிறையில் வைத்தார். ஒட்டுமொத்த குடும்பத்தை நிர்மூலமாக்குவது பாவம் என ஆலோசகர்கள் சொன்னதால், ஒருநாளைக்கு இரண்டு பிடி உணவும், ஒரு சுரைக்காய் குடுவை அளவு நீரும் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் அத்தனை பெரும் அந்த உணவுக்கும், நீருக்கும் அடித்துக்கொண்டு அத்தனையையும் கீழே சிந்தி வீணாக்கினார்கள். இது தினமும் நடந்து வந்தது. அப்போதுதான் தன் உடன்பிறந்தவர்களையும், உற்றாரையும் நோக்கி சகுனி கூறினான்: "இந்த உணவை வைத்துக்கொண்டு ஒரே ஒருவர் உயிர் வாழ முடியும், ம்றவர்கள் அதற்காக உயிர்த்தியாகம் செய்துதான் ஆக வேண்டும், அந்தச் செயல் நமக்குள் நடக்குமா என்பதை அறிந்து கொள்ளத்தான் பீஷ்மர் இவ்வாறு செய்கிறார்? யார் உயிர் வாழவேண்டிய நபர் என்று நமக்குள் முடிவு செய்யுங்கள்''
சிறிது நேர ஆலோசனைக்கு பிறகு சகுனியின் தந்தை சுபலன், அறிவிற் சிறந்த சகுனியே உயிர் பிழைக்க வேண்டும், அந்த உயிரை பீஷ்மாதிகளின் கூட்டத்தை ஒழிக்கவே பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். காந்தாரியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததையும் தங்கள் கூட்டத்தையே சிறைப்பிடித்து, கொலை செய்வதையும் மறக்காமல் இருந்து பழி வாங்க வேண்டும் என்றார். அவர் சொன்னது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்படியே ஒவ்வொரு நாளின் உணவும் சகுனிக்கு அளிக்கப்பட்டது. அவன் கண்ணெதிரே ஒவ்வொருவராக பசியால் செத்து விழுந்தார்கள். மனமெங்கும் கோபமும், பழி வாங்கும் உணர்வும் மேலோங்கியது.
குருவம்ச கூட்டத்தையே ஒட்டுமொத்தமாக அழிப்பேன் என்று சபதம் செய்தார். இதற்கெல்லாம் உச்சமாக தந்தை சுபலன் மரண அவஸ்தையில் இருந்தபோது, சகுனியை அழைத்து அவனின் வலது காலை அடித்து உடைத்தார். சகுனி வலியால் துடித்தபோது, ''உன் ஒவ்வொரு அசைவின்போதும் இந்த மரணங்களை மறக்கக் கூடாது, பழி பழி என்று அலைய வேண்டும்'' என்றார் தந்தை. மேலும் அவரது வலக்கையை ஒடித்துக் கொடுத்து, இதில் இருக்கும் எலும்பைக் கொண்டு தாயக்கட்டைகளை உருவாக்கி கொள், ''சூதாட்டத்தில் சிறந்த உனக்கு இந்த தாயக்கட்டைகளே வேண்டிய எண்ணைக் கொடுக்கும், இதைக் கொண்டே குருவம்சத்தை அழித்து விடு'' என்றார். அதன்படியே அத்தனை உறவுகளையும் இழந்த சகுனி, தன்னந்தனியாக சூதே உருவாக வெளியே வந்தான். தீமையின் வடிவான துரியோதனனின் ஆலோசகன் ஆனான். வீணான மோதலை உருவாக்கி, கௌரவ, பாண்டவ யுத்தத்தை உருவாக்கினான். இதன் மூலம் கிருஷ்ணரின் வேலையை சுலபமாக்கினான்.
அதனால்தான், துரியோதனன் பலராமருக்கு அளித்த மாயக்கண்ணாடியில் ஒவ்வொருவரும் பார்த்தபோது அவரவருக்குப் பிரியமானவர்கள் காட்சி தந்ததுபோல், கிருஷ்ணர் அந்த மாயக் கண்ணாடியைப் பார்த்தபோது, அவருக்கு சகுனியின் உருவம் தெரிந்தது. என்றோ நடக்கும் சிறு அலட்சிய செயல்கூட, பெரிய விரோதியை உருவாக்கி விடும் என்பதே இந்தக் கதை உணர்த்தும் தத்துவம். எனவே எவரையும் அலட்சியம் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதுதான் இந்தக் கதையின் மற்றொரு பரிமாணம்.

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category