*நாளை கோகுலாஷ்டமி!*
☘️ பகவான் மகா விஷ்ணு பூமி பாரம் குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார்.
☘️இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
☘️கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ண பகவானை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும்.
☘️இந்த நாளில் குழந்தை கிருஷ்ணர் நம்மைத் தேடி வருவதன் அடையாளமாக சின்னஞ்சிறு பாதத்தை வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை கோலமாக வரைவது வழக்கம்.
☘️கிருஷ்ணன் கோவில்களில் உறியடித்தல் வழுக்குமரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகள் நடைபெறும்.
☘️பூஜை செய்யும் முறை!
☘️கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்பதால், முதிர் மாலை வேளையில் பூஜை செய்வது வழக்கம்.
☘️இல்ல வாயிலில் கோலமிட்டு, செம்மண் வரைய வேண்டும். கண்ணனை குழந்தையாகவே பாவிப்பதால், சின்னச் சின்னப் பாதங்களை வாசலிலிருந்து இல்லத்தின் உள்ளே வருவதுபோல கோலமாக வரைவர்.
☘️வாயிலில் தோரணம் கட்டி, மாவிலை வைத்து வாயில் நிலைப்படியை அலங்கரிக்க வேண்டும்.
☘️கிருஷ்ணரின் பிறந்தநாள் என்பதால், குழந்தைகளுக்குப் பிடித்த பட்சணங்கள் செய்ய வேண்டும்.
☘️அதில் வெல்லச் சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தட்டை, களவடை- வெல்லச் சீடை மாவில் செய்வது, தேங்காய் பர்பி, திரட்டுப் பால் உட்பட பல பட்சணங்கள் செய்ய வேண்டும்.
☘️முன்னதாக அலங்கரித்து வைத்துள்ள கிருஷ்ணர் படத்திற்கு அவரது பல நாமங்களை கூறிப் பூக்களாலும், அட்சதைகளாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
☘️பின்னர் அவரவர் வேண்டுதல்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். உலகத்தில் உள்ள அனைவரும் சுகமாக வாழட்டும் (சர்வே ஜனா சுகினோ பவந்து) என்று வேண்டிப் பூஜையை நிறைவு செய்வது வழக்கம்.
☘️கண்ணனை வேண்டிக்கொண்டால் அவன் நம் கவலைகள் யாவையும் தீர்ப்பான் என்பது ஐதீகம்.
☘️எட்டு வகை கிருஷ்ணர்கள்!
☘️ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார்.
☘️1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
☘️2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.
☘️3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.
☘️4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
☘️5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
☘️6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
☘️7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.
☘️8. பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.
☘️கிருஷ்ண ஜன்மாஷ்டமி:
☘️ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற விழாவாகும்.
☘️பொதுவாக சிவராத்திரியானது சிவனுக்கு சிறப்பாகும், நவராத்திரி அம்பாளுக்கு விசேஷம், ராமநவமி ராமர் பெயரில் இருக்கிறது.
☘️கந்த ஷஷ்டி சுப்ரமண்யருடைய பெயரில் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியை வைத்து கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது.
☘️ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர். மற்றவர்களெல்லாம் அம்சாவதாரம் என்று சொல்லுவார்கள்.
☘️முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர் பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று அழைக்கப் படுகிறது.
☘️ஸ்ரீ ஜெயந்தி!
☘️கோகுலாஷ்டமியை ஸ்ரீ ஜெயந்தி என்றும் சொல்லுவார்கள்.
☘️காரணம் லட்சுமியை பிரதானமாக வைத்துக்கொண்டு ஜயந்தி கொண்டாடும்போது ஸ்ரீஜயந்தி என்று வைஷ்ணவர்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.
☘️மற்ற அனைவரும் பொதுவாக கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள்.
☘️மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையிலே ராஜ்ய பரிபாலனம் செய்து பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாத் ஷேத்திரத்தில் பிரதாபபட்டம் என்ற இடத்தில் தன்னுடைய கடைசி காலத்தில் இருந்துகொண்டு வைகுண்டம் சென்றதாக வரலாறு சொல்லுகிறது.
☘️வீட்டிற்கு வரும் கண்ணன்
☘️பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.
☘️இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.
☘️கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் இருந்து ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும்.
☘️துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களை இனிப்பு வகைகளையும் அவருக்கு படைத்து தூப தீபம் (மணமிக்க ஊதுபத்தி, கற்பூரம் ஆரத்தி) காட்ட வேண்டும்.
☘️வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.
☘️கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.
ஓம் நமோ நாராயணாய !
0 comments:
கருத்துரையிடுக