இலை மடக்குப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி?
வேளாண்மை அதிகாரி விளக்கம்
நெற்பயிரில் அதிக சேதம் உருவாக்கும் இலை மடக்குப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி? என ராஜாக்கமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலை மடக்குப்புழு தாக்குதல் ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் கன்னிப்பூ சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. பறக்கை ஏலா, மயிலமடை, பால்குளம் ஏலா பகுதிகளில் நெல் பயிர் வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது. சில நேரங்களில் காலநிலை அதிக மழையுடனும், மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது. இச்சமயம் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகமாக வாய்ப்புள்ளது.ஆங்காங்கே நெற்பயிரில் இலை மடக்குப்புழு தாக்குதல் அறிகுறி காணப்படுகிறது. எனவே விவசாயிகள் தக்க கவனம் செலுத்தி பயிரினை கண்காணித்து உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வழிமுறைகள் தாய் அந்துப்பூச்சிகள் இடுகிற முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளை நீளவாட்டில் மடித்து பச்சையத்தை, சுரண்டி உண்டு இலைகளை சேதப்படுத்துகிறது. தாக்கப்பட்ட இலைகள் வெளிறி தோன்றுவதுடன் பயிரில் ஒளிச்சேர்க்கை குறைந்து வளர்ச்சி குன்றி விடுகிறது. நெல் பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் இலை மடக்குப்புழு பொருளாதார சேதநிலையான 10 சதவீதம் மற்றும் கண்ணாடி இலைப்பருவத்தில் 5 சதவீதத்தையும் தாண்டும் பட்சத்தில் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம்:- *டிரைக்கோகிரம்மா கிலோனிஸ் (முட்டை ஒட்டுண்ணிகளை) பயிர் நடவு செய்து 37, 44 மற்றும் 51 நாட்களில் மொத்தம் மூன்று முறை 5 சிசி என்ற அளவில் விட வேண்டும்.* தேவைக்கு அதிகமாக தழை உரங்கள் இடுவதை தவிர்க்கவும். வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைத்தல் மற்றும் புல் இனக்களைகளை நீக்க வேண்டும். * முள்ளுள்ள கொப்பு கொண்டு இலை மடிப்புகளைத் திறக்க வேண்டும்.* வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம், 25 கிலோ எக்டர் (அல்லது) வேப்பெண்ணெய் 3 சதவிகிதம் ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.பூச்சிக்கொல்லி பொருளாதார சேதநிலையை தாண்டும் போது பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்:-* பாசலான் 1500 - மில்லி / ஹெக்டேர்* குளோரிபைரிபாஸ் 1250 மில்லி / ஹெக்டேர்* அசாடிராக்டின் 1000 மி.லி. / ஹெக்டேர்* கார்டேப்ஹைட்ரோகுளோரைடு 1000 கிராம் / ஹெக்டேர்* புரோபானோபாஸ் 1000 மி.லி. / ஹெக்டேர் எனவே அனைத்து விவசாயிகளும் தற்சமயம் நிலவும் காலநிலையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெற்பயிரினை பாதுகாத்திடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக